இந்தியா- குஜராத்தின் சூரத் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பம் ஒன்றின் கணவன், மனைவி அவர்களிள் வயதான பெற்றோர் மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர்.
சூரத்தின் பலன்பூர் ஜகத்னகாவில் வசித்துவரும் மணிஷ் சோலன்கி என்னும் தளபாட விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் இவ்வாறான ஒரு முடிவை எடுத்துள்ளார்.
நிதி நெருக்கடியே காரணம்
இதேவேளை சடலங்கள் இருந்த அறையை பொலிஸார் சோதனையிட்டபோது “தற்கொலைக்கு நிதி நெருக்கடியே காரணம்” என எழுதப்பட்ட குறிப்பு கடிதம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தளபாட நிலையத்தில் பணியாற்றிவரும் ஒருவர் குறித்த உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.அவரது அழைப்பை ஏற்காத நிலையில், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் சந்தேகமடைந்த அவர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஆறு பேர் விஷம் உட்கொண்டு உயிரை மாய்துள்ளதாகவும் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பொலிஸார் தற்கொலைக்கான உண்மை காரணம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.