மூலிகை வகைகளில் முக்கிய இடம் பிடிக்கும்: கண்டங்கத்திரி பயன்கள்

கண்டங்கத்திரி ஒரு மூலிகைச் செடியாகும். இது பளிச்சென்ற பசுமை நிறத்தைக் கொண்டது. தரிசு நிலங்களில் அதிகம் வளரக்கூடியது. 1.3cm ஐ விட அதிக நீளமாக வளரக்கூடியது. கூரான மஞ்சள் நிற முட்களைக் கொண்டது.

கண்டங்கத்தரி மூலிகை வகைகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. சித்த மருந்துகளில் தசமூலம் என்பது பிரசித்தி பெற்றது. இந்த தசமூலம் மருந்துகளில் பத்து வகையான மூலிகைகள் உள்ளன. இதில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.

கத்தரிகளில் ராணியாக மகுடம் சூட்டுவது கண்டங்கத்தரியே ஆகும். இதன் பூக்கள் நீல நிறத்திலும், காய்கள் கத்தரிக்காய் வடிவிலும் இருக்கும். இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டதாகும்.

இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. இதன் பழத்தை உலர்த்தி பின் நெருப்பில் சுட்டுப் பொடியாக்கி ஆடாதோடை இலைகளில் வைத்து சுருட்டி புகைப்பிடித்தால் பல்வலி, பல் கூச்சம் நீங்கும்.

இருமல், காச நோய், சுவாச நோய் சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்க வல்லது. தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளைச் சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடியாக்கி தினமும் இரண்டு வேளை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் குழைத்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.

தலைவலி, வாதநோய்களைப் போக்கக்கூடியது. கண்டங்கத்தரிப் பழங்களைச் சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலை மற்றும் வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் வலி நீங்கும். மற்றும் பித்தவெடிப்பு அல்லது பாத வெடிப்பு போன்றனவற்றையும் சரிசெய்யும்.

உடல் சூடு மற்றும் சிறுநீர் உபாதைகளைத் தீர்க்கும். சிறுநீர்ப் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகும் போது கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து அரைத்து 1½ தேக்கரண்டி சாறு எடுத்து அதனுள் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் எரிச்சல் கடுப்பு நீங்கும்.

இளம்பிள்ளை வாதத்தை குணப்படுத்தக்கூடியது. இளம்பிள்ளை வாதநோய் உள்ள சிறுவர்களுக்கு கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து அந்நீரில் குளியல் செய்து வந்தால் குணமாகும்.

வியர்வை நாற்றத்தை போக்கும். கண்டங்கத்திரி இலையின் சாற்றை இடித்து பிழிந்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி உடலில் தேய்த்து வரும்போது வியர்வை நாற்றம் நீங்கும்.

சளிப் பிரச்சனையைத் தீர்க்கும். கண்டங்கத்தரி முழுச் செடியையும் நன்கு கழுவி நிழலில் காய வைத்து பொடியாக்கி பின் சிறிதளவு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிப் பிரச்சனை தீரும்.

மூட்டு வலியைப் போக்கும். கண்டங்கத்திரி இலை சாறு, வாதநாராயணன் இலை மற்றும் முடக்கொத்தான் இலைச்சாறு மூன்றையும் நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து தைல பதத்தில் வந்ததும் வடிகட்டி எடுத்து பச்சைகற்பூரம் அதனுள் சேர்த்து எடுத்து வைத்துக்கொண்டு, பின் தேவையான நேரம் தைலத்தை சிறிதளவு சூடாக்கி பூசி வந்தால் மூட்டு வலி சரியாகும்.

Shares