இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படும் கற்பூரவள்ளி இலையின் பயன்கள்
கற்பூரவள்ளி (Coleus aromaticus) புதராக வளரக் கூடிய ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ் போற்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
இது இந்தியா, இலங்கை போன்ற பல நாடுகளில் காணப்படுகின்றது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், கசப்புச் சுவையும், காரத்தன்மையும் வாசனையும், கொண்டதாக இருக்கும்.
இதன் மருத்துவக் குணமறிந்தே நம் முன்னோர்கள் இதனை அதிகம் வீடுகளில் பரவலாக வளர்த்து வந்தனர். இன்றும் பல வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றது.
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்
கற்பூரவள்ளி இலையானது இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுகின்றது. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும். குழந்தைகளின் சளியைப் போக்க இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மில்லி சாருடன் எட்டு மில்லி தேன் கலந்து கொடுக்கலாம்.
தோலில் ஏற்படும் படை, சொறி, அரிப்பு போன்றறைக் குணப்படுத்தும். இதற்கு கற்பூரவள்ளி இலைகளைக் கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
பூச்சிக் கடிகளைக் குணமாக்கும். சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் போக்குவதற்கு கற்பூரவள்ளி இலைச் சாற்றைப் பிழிந்து விடலாம்.
ஆஸ்டியோபொராஸிஸ் நோயைக் குணமாக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள், மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மனதில் ஏற்படும் படபடப்பைப் போக்கி மன அமைதிக்கு உதவுகின்றது. கற்பூரவள்ளி இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றை போக்கும் தன்மை கொண்டவை எனவே கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மார்பக புற்று நோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும். கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா – 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீரகங்களின் நலனை காக்கிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்துப் பாதுகாக்கும்.
புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் போன்றவற்றை நீக்கும். கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி, அதில் பாதியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.