காதலனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலி தொடர்பில் வெளியான தகவல்

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலனால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாயத்தில் பட்டதாரியான குருநாகல் ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

காதலியை தாக்கிய காதலன் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காதல் உறவு
காதலனும் காதலியும் ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொடங்கிய இந்த காதல் உறவு நான்கு வருடங்களாக தொடர்ந்துள்ளது. அவர்கள் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர்.

நிட்டம்புவ எல்லக்கல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் காதலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் காதல் தொடர்பு இருப்பதாக காதலன் சந்தேகப்பட்டு, கடந்த 2ம் திகதி வேலை முடிந்து வெளியே வந்தபோது அவரிடம் தகராறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று அதனை சமரசம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும் இரவு 8:00 மணியளவில் காதலியை காதலன் தாக்கியது தெரியவந்தது.

ஹோட்டலில் தாக்குதல்
ஹோட்டல் அறையில் வைத்து தாக்கப்பட்ட போது காதலன் மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த ஹோட்டல் அறையின் தரையில் பல ரத்தக்கறைகள் இருந்தன.

ஹோட்டல் அறையின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியின் தலை, கை மற்றும் முழங்கால் பகுதியில் குறித்த இளைஞன் தாக்கியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலி சுயநினைவின்றி இருப்பதை அறிந்த காதலன் முச்சக்கரவண்டி ஒன்றை கொண்டு வந்து அவரை வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மேலதிக பரிசோதனை
அங்கு அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக பரிசோதனையின் பின்னர் காயமடைந்த பெண் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

யுவதியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Shares