கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. சீதாராம் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கேரளாவின் முதல் திருநங்கையாக வரலாறு படைத்த அவரது பயணம் குறித்து பார்ப்போம்.. ”மற்ற திருநங்கைகளைப்போல் அல்லாமல், எனது கனவுகளை அடைய என்னுடைய பெற்றோர் எனக்கு முழு ஆதரவளித்தனர்.
மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர். நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்,” என்கிறார் டாக்டர் வி.எஸ்.பிரியா. ஆணாக பிறந்தவர், தனது சிறுவயதில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண்மையை உணரத்தொடங்கினார். பெண்மை குணங்களைக்கொண்டு ஆணாக வெளியில் வாழ்வது அவருக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் தன்னுடைய உண்மையான அடையாளத்தை, பெற்றோரிடம் சொல்லத் தயங்கினார். ”அவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய பிரச்னைகளையெல்லாம் டைரி ஒன்றில் எழுதுவேன். இறுதியில் அது அவர்கள் கையில் சிக்கியது. இதை அறிந்ததும், மற்ற பெற்றோர்களைப்போல அல்லாமல், என் பெற்றோர், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நல்லவேளையாக அந்த மருத்துவர் எனக்கு எந்தவித மனநல பிரச்னையுமில்லை,” என்று கூறினார்.
என்னுடைய 15வது வயதில்தான் என்னுடைய அடையாளத்தை சமூகத்தில் வெளிப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன், கேலி செய்யப்பட்டு, கொடுமை செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தேன். பள்ளியில் என்னுடைய சுயமான உடல்மொழியை வெளிப்படுத்துவது மிகவும் கடினமான இருந்தது. அதனால், அந்த உடல்மொழியை மறைத்து பொய்யான தோற்றத்தை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டேன். பள்ளிப்படிப்பு முடிந்து, பெண்கள் மட்டுமே வாழும் ஒரு பகுதிக்கு ஓடிச் சென்றிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பெற்றோர்களிடம் கொண்ட பாசத்தால் அவர்களை விட்டுப் பிரிய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய அம்மா-அப்பா இருவரும் நர்ஸ். அவர்கள் என்னையும், அண்ணனையும் மருத்துதவராக்கி பார்க்கவேண்டும் என்று விரும்பினார்கள். என்னுடைய அண்ணன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பெங்களூரில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். நான் ஆசிரியராக வேண்டும் என்று தான் விரும்பினேன். இருப்பினும் எனது பெற்றோருக்காக மருத்துவராக வேண்டும் என்று என் முடிவை மாற்றிகொண்டேன்.
அதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு நுழைவுத்தேர்வு எழுதி திருச்சூரில் உள்ள வைத்தியரத்னம் ஆயுர்வேதா கல்லூரியில் சேர்ந்தேன். ஆயுர்வேதா மெடிசன் அண்ட் சர்ஜரி (Bacelor of Ayurveda Medicine and surgery BAMS) யை ஒரு ஆணாக முடித்தேன். திருமணத்தை தவிர்த்துவிட்டு, மங்களூரில் MD (Medicinae Doctor) படிப்பை தொடர்ந்தேன். அதைப் படித்து முடித்ததும், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, திரிபுனிதுரா மற்றும் கண்ணூரில் உள்ள அரசு ஆயுர்வேதக் கல்லூரி ஆகியவற்றில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. பிரியா “இந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஆணாக இருக்க மிகவும் கஷ்டப்பட்டு முயற்சித்தேன். என் நடை முதல் ஒரு ஆணை போல ஆடை அணிவது வரை, எனது பெண்பால் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். 2018 ஆம் ஆண்டில் தான் திருச்சூர் சீதாராம் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவரானேன். ஒரு டாக்டராக சிறப்பாகச் செயல்படத் தொடங்கினேன். எனது பெற்றோர் தன்னைப் பற்றி பெருமிதம் கொண்டனர். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன்.” ஆனால் என்னுடைய உண்மையான அடையாளம் என்னை வேட்டையாடிக் கொண்டுதான் இருந்தது. எனது அடையாளத்தைப் பற்றி என் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும் மற்றும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். “பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை, அதன் செலவுகள் மற்றும் அதன் பின்விளைவுகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். நம்பிக்கையுடன், நான் என் பெற்றோரிடம் உண்மையைச் சொன்னேன். அவர்கள் அதிர்ச்சியடைந்ததை விட மிகவும் வருத்தப்பட்டார்கள், அவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் நான் உண்மையை வெளிப்படுத்தாவிட்டால் நான் எனக்கு நியாயம் செய்திருக்க மாட்டேன். இறுதியில், எனது ஆராய்ச்சியே என் பெற்றோரை நம்பவைக்க உதவியது. எனக்கு அறுவைச்சிகிச்சை நடந்த போது அம்மா மருத்துவமனையில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். “எனக்கு இன்னும் இரண்டு அறுவை சிகிச்சைகள் உள்ளன – குரல் சிகிச்சை மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சைகளின் கட்டணம் தேவைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. ஒரு சாதாரண மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும், ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, நான் ரூ.8 லட்சம் விலையுயர்ந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தேன். எனது சேமிப்பிலிருந்து நான் இந்த கட்டணத்தை செலுத்தினேன். பிரியா ஆனால் அதில் 95 சதவீதம் எனது பெற்றோரால் வழங்கப்பட்டது. என்னுடைய இந்த மாற்றத்தை மருத்துவமனை நிர்வாகம் எப்படி எடுத்துக்கொள்ளும் என நினைத்து பதட்டமாகவே இருந்தது.
ஆனால் அவை எனக்கு எளிதாகவே இருந்தன. ஊழியர்களிடமிருந்து மருத்துவமனையில் உள்ள எம்.டி வரை – அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். டாக்டர் வி.எஸ். பிரியாவாக நான் திரும்பி வருவேன் என்று அவர்களுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இருப்பினும், எனது வழக்கமான நோயாளிகளைப் பற்றியும், எனது புதிய அடையாளத்திற்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள் என்பதையும் பற்றி நான் பதற்றமடைந்தேன். அவர்களில் பெரும்பாலோர் அறுவைச்சிகிச்சையைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தனர். மேலும் திருநங்கை பெண் மருத்துவராக அது என் சமூகப் பொறுப்பு என்று கருதி, அவர்களுக்கான அனைத்து சந்தேகத்ததிற்கும் விளக்கமளித்தேன். ஒரு பெண்ணுக்குரிய பெயராக எதைத் தேர்வு செய்யலாம் என யோசித்தபோது ஜானகி என்ற பெயரை முடிவு செய்தேன். அப்போது எனது உறவுக்கார பெண் பிரியா என்ற பெயரை பரிந்துரை செய்தாள். பிரியா என்றால் அனைவராலும் அன்பு செலுத்துபடுபவள் என்று அர்த்தம். ஆகவே எனது பெயரை பிரியா என வைத்துக்கொண்டேன். உச்சரிப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது!” என்றார் அந்த சாதனை அரசி.