கேரள அரசின் எழுத்தறிவுத் திட்டத்தில் 108 வயது தமிழகப் பெண் முதலிடம் பிடித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கில் 108 வயதான மூதாட்டி ஒருவர் கல்வி கற்று தேர்வில் 100க்கும் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யார் அந்த மூதாட்டி, தள்ளாடும் வயதிலும் தணியாத கல்வி தாகத்திற்கு காரணம் என்ன பார்க்கலாம்…
108 வயதிலும் கல்வி கற்கும் மூதாட்டி:
1915ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் பிறந்த கமலக்கனி, சிறு வயதில் கேரள மாநிலதிற்கு புலம்பெயர்ந்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிய தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பம், குடும்பமாக குடிபெயர்வது இன்றளவு வழக்கமாக உள்ளது.
இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த கமலக்கனி, தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையேயுள்ள எல்லையில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய வண்டன்மேடு பகுதியில் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
அதன் பின்னர், தனது அன்றாட வாழ்க்கைக்காக ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். சுமார் 80 வருடங்களாக கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வரும் கமலக்கனிக்கு கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் இருந்து வந்துள்ளது. ஆனால், தோட்டத்தில் இடைவிடாமல் வேலை இருந்ததால் அவரால் கல்வி கற்க இயலவில்லை.
எழுத்தறிவு திட்டம்:
தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 96.2 சதவீதம் பேர் கேரளாவில் கல்வியறிவு பெற்றுள்ளனர். மூத்த குடிமக்கள் கல்வி அறிவைப் பெறுவதற்கு உதவுவதற்காக, கேரள அரசு “அனைவருக்கும் மற்றும் எப்போதும் கல்வி” என்ற முழக்கத்துடன் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட “அறிவொளி இயக்கம்” (வெகுஜன எழுத்தறிவு இயக்கம்) போலவே, கேரளாவில் “சம்பூர்ணம் சாஸ்த்ரா எழுத்தறிவுத் திட்டம்” முதியோர்களுக்கு அடிப்படை கல்வி அறிவை போதித்து வருகிறது.
கேரள அரசின் எழுத்தறிவு திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கமலக்கனி 108 வயதில் கல்வி கற்க ஆரம்பித்துள்ளார். கமலக்கனிக்கு வயது தான் 108 ஆகிறதோ தவிர, கண் பார்வையும், செவித்திறனும் நன்றாகவே உள்ளது. இதனால் தள்ளாத வயதிலும் சின்னச்சிறு குழந்தையைப் போல குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் கல்வி கற்றுள்ளார்.
பிரபல தொலைக்காட்சிக்கு கமலக்கனியின் பேரன் அளித்த பேட்டியில்,
“அடுத்த மாதம் பாட்டியின் 109வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனது பாட்டி இரண்டாம் வகுப்பை மட்டுமே முடித்திருந்தாலும், அவர் எப்போதும் கல்வி கற்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்தார். தனது முதிர்ந்த வயதிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கேரள அரசும் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது,” என்கிறார்.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இறுதித்தேர்வை எழுதிய மூதாட்டி கமலக்கனி, 100க்கு 97 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். தள்ளாத வயதிலும் கல்வி கற்று சாதனை படைத்த மூதாட்டி கமலக்கனிக்கு கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.