பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் தங்கள் குட்டிகளின் மீது அலாதி பாசம் கொண்டவைதான். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வீட்டில் இருந்து காலையில் மேய்ச்சலுக்காக வெளியே வந்த பசுமாடு ஒன்று மாலை வெகுநேரம் ஆகியும் வழக்கம் போல் வீடு திரும்பவில்லை. ஏற்கனவே நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அந்த மாடு வீடு திரும்பாததால் மாட்டின் உரிமையாளர் மாட்டை இரவு முழுவதும் தேடினார். ஆனாலும் மாடு கிடைக்கவில்லை. தன் மாட்டை யாரோ பிடித்து சென்றுவிட்டார்கள் என்னும் முடிவுக்கு வந்தார் உரிமையாளர். இந்நிலையில் மறுநாள் காலையில் தன் உரிமையாளரின் வீட்டு வாசலுக்கு வந்தது மாடு. கூடவே உச்ச தொணியில் அம்மே என குரல் எழுப்பி உரிமையாளரை வாசலுக்கு அழைத்தது.
தொடர்ந்து அந்த மாடு முன்னே நடக்க உரிமையாளர் பெண்மணி மாட்டின் பின்னால் நடந்து சென்றார். மாடு திடீரென அடர்ந்த காடு போன்ற பகுதிக்குள் சென்றது. உரிமையாளரும் பின்னாலேயே சென்றார். அங்கே மாடு அழகான கன்றுக்குட்டியை பிரசவித்து போட்டிருந்தது. நேற்று மேய்ச்சலுக்கு வந்தபோதே கன்று ஈன்றுவிட்ட பசு, ஒருநாள் முழுவதும் தன் குட்டிக்கு காவலாக பக்கத்திலேயே நின்றுவிட்டு மறுநாள் வீட்டுக்கு வந்தது ஆச்சர்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இந்த பசுமாட்டின் தாய்ப்பாசம் ஒருநிமிடம் நம்மையே சிலிர்க்க வைத்துவிடும் போலிருக்கிறது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.