செயற்கை நுண்மதி

மனிதர் , விலங்குகள் மற்றும் பொறிகள் சார்ந்த நுண்மதித் தொழிற்பாடுகளையும் நடத்தைகளையும் நுணுகி ஆராய்ந்து அவற்றை ஆக்கப் பொறியில் (Artifact) வடிமைத்து இயக்குதலை செயற்கை நுண்மதி யாக்கம் எனலாம். இது ஒருவகையிலே கடினமான பண்பாகவும் வியப் பூட்டும் பண்பாகவும் அமைந்துள்ள வேளை நவீன கல்வியியலிலும் உளவியலிலும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் எழுகையையும் கொண்டுள்ளது.

ஊகங்களையும், நம்பிக்கைகளையும் அகநோக்கலையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வந்த நாட்டார் உளவியலை நவீன விஞ்ஞானத்தளத்துக்குக் கொண்டு வருவதில் ‘நடத்தை வாத உளவியல்’ பெரும் பங்காற்றியது. ஆயினும் விஞ் ஞானத்தின் வளர்ச்சி மனித அகவய உணர்வுகளைச் சிறைப் பிடிக்க முடியாதுள்ள நிலையைச் சமகாலத்து மெய்யியலாளர் தோமஸ் நாயெல் (Nagel 1979) தெளிவாகச் சுட்டிக் காட்டினார். நடத்தைவாத உளவியலின் மட்டுப்பாடுகளை அடியொற்றித் தீவிர உற்றுநோக்கலையும் வரன் முறையான பதிவுகளையும் அடியொற்றி ‘அறிகை உளவியல்’ வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆனால் அறிக்கை உளவியலும் மனித உணர்வுகளைக் குவியப்படுத்தத் தவறியது. இந்த இடைவெளியை மானிட உளவியல் குறிப்பாக கால் ரொஜர்சின் முன்மொழிவுகள் நிறைவு செய்ய முயன்ற தாயினும் அவற்றில் எண்ண முதல் வாதத்தின் (Idealisam) செல்வாக்குகளே மேலோங்கி நின்றன. மனித உணர்வுகளை வாழ்வாதாரங்களுடன் தொடர்பு படுத்தியமை உளப்பகுப்பு வாதத்தில் இடம் பெற்றாலும் அவற்றை வரன் முறையான தருக்கத்துக்கு மார்க்சிய உளவியல் கொண்டு வந்தது. இவ்வாறாக

கருத்தியற் பின்னணியிலலே தான் செயற்கை நுண்மதியை நோக்க வேண்டியுள்ளது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு – காணும் ஆற்றல் நுண்மதியின் செயற் பாடாகின்றது. பொருத்தமானதும் தருக்க பூர்வமானதுமான துலங் – கலைத் தருதல் அதன் பிறிதொரு பரிமாணம். அது வேகமான சிந் தனைத் தொழிற்பாடுகளையும் கொண் டிருக்கும். மாறும் சூழலுக்கு ஏற்ற வாறு பொருத்தமான துலங்கலைத் தருதலும் அதன் தொழிற்பாடாகும். உளம் சார்ந்த எந்தவொரு செயற் பணியையும் (Task) வினைத்திறனுடன் மேற்கொள்ளல் நுண்மதியின் நெறிப்பாடாக அமையும். இலக்குடனும் நியாயித்தலுடனும் தொழிற்படல் அதற்குரிய தனித்துவமாகின்றது. புதிய சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தமாக வினைப்படலும் நுண்மதிக்குரிய வேலைப்பாடாகின்றது. கற்றல் தொடர்பாக உருவாக்கம் பெற்ற தகவல் நிரற்படுத்தற் கோட்பாட்டினை அடியொற்றி அமெரிக்க உளவியலாளாகிய ஸ்ரன் பேர்க் (Stenberg 1985) நுண்மதியின் பின்வரும் படிநிலைகளை விளக்கினார்

1. நிழற் கோடாலாக்கம் – பொருத்தமான தகவல்களை இனங்கண்டு ஒழுங்கமைத்தல்.
2. அனுமானித்தல் – பொருத்தமான ஊடகங்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் தொடர்படுத்துதல்.
3. இணைவரைபாக்கம் (Mapping) – முன்னைய சந்தர்ப்பத்துடன் புதிய சந்தர்ப்பத்தைத் தொடர்பு படுத்துதல்.
4. பிரயோகம் செய்தல்

5. தீர்வை நியாயப்படுத்துதல்
6. துலங்குதல் இவற்றை அடியொற்றி நுண்மதியாக்கம் கட்டமைப்புச் செய்யப்படுகின்றது.

நுண்மதிபற்றிய மேற் கூறிய விளக்கங்களில் இருந்து மேலும் விரிந்த நோக்கின் அடிப்படையிலும் விரிந்த புலக்காட்சியைச் செயற்கை நுண்மதி ஏற்படுத் துகின்றது. ஏற்கனவே நிலைபேறு கொண்ட கலை – விஞ்ஞானம், பொறியியல் – உயிரியல், தனி மனிதர் – சமூகம் ஆகிய இடைவெளிகளைச் சுருங்கச் செய் தலும் அறிவின் ஒன்றிணைப்பை நுண்மதி நோக்கில் தொடுப்பதும் செயற்கை நுண்மதியில் முன்னெடுக் கப்படுகின்றது. செயற்கைப் பண்பாட்டில் நிகழ்ந்து வரும் படிமலர்ச்சியில் ஒரு முக்கியமான திருப்பமாக இது அமைகின்றது. மனித மூளை, விலங்கு மூளை, பொறிகள் ஆகியவற்றின் நுண்மதிக்குரிய பொதுவிதி களை அறிதலும் அவற்றை அடியொற்றித் தொழிற் படலும் சிறப்பிடம் பெறுகின்றன.
உயிரியல் சார்ந்த நுண்மதியின் இயல்பு செயற் கை நுண்மதி ஆக்கத்துக்கு உந்து விசையாக அமைந் தது. அண்மைக்காலமாக நரம்பியல் விஞ்ஞானம் தீவிர வளர்ச்சி பெற்று வருகின்றதாயினும் ‘நியுறொன்’ எனப்படும் மூளையின் தனித்த கலன் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது இன்னமும் ஆழ்ந்த கண்டறியப்படாத புதிராகவே உள்ளது (Blay Whitby, 2006). குறிப்பிட்ட வினைப்பாட்டுக்கும் துலங்களுக் கும் ஏற்றவகையிலே மூளையிலே இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. ஆயின் செயற்கை நுண்மதித் தொழிற்பாடும் அமைப்பும் இத்தகைய உயிர் இரசாயன இயல்பிலும் வேறு. பட்டிருத்தலை குறிப்பிடத்தக்கது. அவை உயிர் இரசாயனவியல் சாராத செயற்பாடுகளை மேற் கொள்கின்றன.
செயற்கை நுண்மதியானது எண்வழி (Digital) எலத்திரன் முறைமையை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றும் பூச்சியமே அங்கு எடுத்தாளப்படு கின்றன. எலத்திரன் தொழிற்பாடு விரைந்து வினைப் படும் கட்டமைப்பைக் கொண்டள்ளது. அதிக வேகம் அதன் ஆற்றலை வளப்படுத்துகின்றது.
மனித மூளையில் உள்ள ஒவ்வொரு நியுறொன் எனப்படும் தனிக்கலனும் ஐந்து ஆயிரம் தொடக்கம் இருபதாயிரம் வரையிலான தொடர்புகளை கொண் டுள்ள சிக்கலான அமைப்பாக்கத்துடன் தொழிற்படுகின்றது. ஒவ்வொரு தனிக்கலனதும் வெளியீடு வேறு பல தனிக்கலன்களுக்கு உள்ளீடாக அமைகின்றது. மனித மூளையில் இருநூறு பில்லியன் வரையிலான நியுறன்கள் காணப்படுகின்றன. கணினிகளில் இருக்கும் போன்று மத்திய நிரற்படுத்தும் அலகு (CPU) மனித மூளையிலிருந்து செயற்கை நுண்மதியை இயக்கும் கணினியை வேறுபடுத்துகின்றது ஆனால் தொடர்ச்சியான சிக்கல் நிரம்பிய தொழிற்பாடுகளைக் கொண்ட மனித மூளையின் இயக்கங்களை அடி யொற்றி மனித நுண்மதித் தொழிற்பாட்டிலே பேச்சு மொழியும் எழுத்து மொழியும் சிறப்பார்ந்த இடங் களைப் பெறுகின்றன. அருவப்படுத்தலும் எண்ணக்கருவாக்கமும் அதன் தொழிற்பாடுகளை வளப் படுத்துகின்றன.

செயற்கை நுண்மதியாக்கத்தைத் தரும் கணினிகள் மனித மொழியின் எழுத்தியல்புகளை அடிப் படையாகக் கொண்ட நுட்பவியலைப் பயன்படுத் தாது. சலாகைக் கோடலை (Barcordes) அடிப்படை யாகக் கொண்டு நுண்மதி வினைப்பாடுகளை மேற் கொள்கின்றன. இந்த அமைப்பும் உயிரியல் நுண் மதியையும் செயற்கை நுண்மதியையும் வேறுபடுத்து கின்றது. மனித மொழியில் உறுதிடம் (Consistent) பற்றிய ஊசல் நிலை காணப்படலாம். ஆனால் செயற் கை நுண்மதியைத் தொழிற்படுத்திக் கொண்டிருக்கும் கணினிகள் திட்டவட்டமான தெளிவான உறுதிட உள்ளீடுகளையே வேண்டி நிற்கின்றன.
மேற்பார்வை செய்யப்படும் கற்றல் பணியைப் போன்று செயற்பாடு செயற்கை நுண்மதியாக்கத்தில் மேற் கொள்ளப்படுகின்றது. இந்தத் தொழிற்பாட்டை மேற்கொள்வதற்கு அனுசரனையாக செயற்கை நியுறல் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை நுண்மதியாக்கத்தில் செயற்கை நியுறல் பின்னலமைப்பின் முக்கியத்துவம் குறிப் பிடப்பட வேண்டியுள்ளது. ஆனால் இதன் வழியாக முற்று முழுதான மனித நுண்மதி வினைப்பாட்டை எட்டிவிட முடியுமா என்பது கேள்விக்குரியதாகின் றது. செயற்கை நுண்மதியாக்கம் உயிரியற் கூர்ப்பு அல்லது படிமலர்ச்சியிலிருந்தும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
தெரிதல் என்ற செயற்பாட்டினாலும் மரபு அணுக்களின் மீள் சேர்க்கையினாலும் படிமலர்ச்சி நிகழ்ந்து வருவதாக அண்மைக்காலத்தைய உயிரியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வம்ச விருத்திச் செயல்முறையானது மரபு அணுக்களின் வெற்றிகரமான மீள் சேர்க்கையை முன்னெடுத்து வருகின்றது. கணினிகளில் மரபு அணுக்களை ஒத்து நிற்கும் வகையில் கணினிக் கோவை நுண்ணியங்கள் (Bits) உருவாக்கப் பட்டுள்ளன. தெரிதலும் மீள் சேர்க்கையும் கணினிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சீர்த்தூக்கல், ஆபத்துக்களைப் பரிசீலித்தல், ஒப்பு நோக்குதல், மதிப்பீடு செய்தல் என்றவாறான தொழிற்பாடுகள் தீர்மானமெடுக்கும் சிந்தனைகளிலே இடம் பெறு கின்றன. ஒருவரால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட அறிகை அமைப்பின் வழி யாக சிந்தித்தலில் வினைத்திறன் முன்னெடுத்துச் செல்லப்படும்.

பிரச்சினை விடுவித்தற் சிந்தனையானது பிரச்சினை பற்றிய புலக்காட்சியோடு ஆரம்பிக்கின்றது. தகவல்களைத் திரட்டுதல், ஒழுங்கமைத்தல், பதிலீடுகளின் ஒப்பு நோக்கல், மதிப்பீடு செய்தல், முதலியவை பிரச்சினை விடுவித்தற் சிந்தனையின் போது தொழிற்படுகின்றன. பிரச்சினை விடுவித்தலின் பரிமாணங்கள் செயற்கை நுண்மதியாக்கத்திற்குத் துணை நிற்கின்றன.
மொழியும் எண்ணக்கருவும், படிமங்களும், குறியீடுகளும், சிந்தனையை இயக்குவதற்குரிய கருவிகளாகின்றன. செப்பனிடப்பட்ட இக்கருவிகளுக்கும் சிந்தனையின் செறிவுக்கும் நேரடியான இணைப்பு உண்டு. சிந்தனையின் வினைத்திறன் பாட்டுக்கும் நுண்மதியின் மேம்பாட்டுக்கும் நேரடியான தொடர்புகள் இருத்தலை மனங்கொள்ள வேண்டியுள்ளது.
பிரச்சினையை எதிர்கொள்ளும் பொழுது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் பொழுது அறிவை நகர்த்த முற்படும் பொழுதும் நிகழும் உளச் செயல் முறையே சிந்தனையாகின்றது சிந்தித்தல் ஆக்கப்பரிமாணங்களையும் திறனாய்வுப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது. உள்ளத்தை வளப்படுத்தும் செயலாகவும் உள்ளத்தைக் கட்டியெழுப்பி உருவாக்கும் செயல் முறையாகவும் சிந்தித்தல் மேலெழுகின்றது. சமூக இருப்பு சிந்தனைக் குரிய தளமாகவும் வளமாகவும் அமைதல் குறிப் பிடத்தக்கது.
ஆக்கச்சிந்தனையின் போது கட்டற்றமுறையிலும் நெறிப்படுத்தப்பட்ட முறையிலும் கற்பனை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. புதிய தொடர்புகளும் இணைப்புகளும் கண்டறியப்படுகின்றன. புதிய பதி லீடுகள் இனங்காணப்படுகின்றன. புதிய வடிவமைப்புக்கள் தேடப்படுகின்றன. புதிய புலக்காட்சியின் தோற்றங்கள் தூண்டிவிடப்படுகின்றன. கலைகளின் வளர்ச்சிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களுக்கும் புத்தாக்க நடவடிக்கைகளுக்கும் ஆக்கச் சிந்தனைகளே அடியாதாரங்களாகின்றன.

பிரச்சினை விடுவித்தற் சிந்தனை குறிப்பிட்ட இலக்குகளுடனும் நெறிப்பாடுகளுடனும் மேற்கொள்ளப்படுகின்றது. பிரதியீடுகளை உயிரினங்களின் படிமலர்ச்சியில் நுண்மதித்திறன் மேம்பாடு கொண்டு – வந்துள்ளமை போன்று கணினியின் படிமலர்ச்சியில் செயற்கை நுண்மதியின் திறன் தொடர்ச்சியாக மேம் பாடு கொண்டு வருகின்றது.
செயற்கை நுண்மதியை மேம்படுத்திக் கொள்வதற்கு விண்வெளி ஆய்வுகளுக்கும் பரிசோதனை – களுக்கும் ஆகும் செலவுகளைப் போன்று அதிக பணச் செலவு வேண்டியதில்லை. மிகுந்த ஆக்கமலர்ச்சி உள்ளீடுகளே அதற்கு அதிக அளவில் வேண்டப்படுகின்றன. மனிதருக்குப் பதிலீடாக அன்றி அனுசரனையாக மேம்பாட்டை முன்னெடுத்தலுக்குத்
துணைசெய்தலே செயற்கை நுண்மதியாக்கத்தில் முன்னுரிமை பெறத் தொடங்கியுள்ளது.
புதிய கணினித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் றொபோ எனப்படும் கணனிப் பொம்மைகளும் மனிதரது தொழிற்பாடுகளிலும் சிந்தனைப் போக்கு களிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலைமாற்றம் நிகழும் காலகட்டத்தில் அவை வேலையின்மைப் போக்குகளையே ஏற்படுத்தும் (Blay Whitby, 2006). இந்நிலையில் புதிய மாற்றங்களுக்கும் புதிய அறை கூவல்களுக்கும் ஏற்றவாறு கல்வியை மீள் ஒழுங்கு படுத்த வேண்டிய தேவை ஏற்படும் இயந்திரப் புரட்சி தோன்றிய காலகட்டத்தில் வேலையின்மையை அது தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் நிலவியது. அவற்றால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பது பின்னைய அனுபவமாயிற்று. அவ்வாறே செயற்கை நுண்மதியும் அவற்றால் இயக்கப்படும் பொறிகளும் வேலையின்மையைத் தோற்றுவிக்கும் என்ற எதிர் பார்ப்பு உறுதியானதல்ல.
செயற்கை நுண்மதிப்பொறிகள் சார்ந்த உத்திக் காரணிகளை உடைமையாக வைத்திருப் போர் கூடுதலான பொருண்மியச் சுரண்டல்களை அல்லது பறிப்புக்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து வாய்ப்பு இருக்கும் என்பது நடைமுறை யதார்த்தமாகும். இதற்கு அனுகூலமான முறையிலே கல்விச் செயற்பாடுகளையும் கல்வியின் உள்ளடக்கத்தையும் வடிவமைப்பதற்குரிய செயற்பாடுகள் முன்னேற்றம் பெறுதல் தவிர்க்க முடியாதது என்று கூறுதலும் தவறாகாது. அவற்றின் அடிப்படையாகத் தோன்றும் புதிய சந்தை நிலவரங்களுக்குரிய கல்வியை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் விரிவடையத் தொடங்கிவிட்டன.
எல்லாவித தொழில் நுட்பமும் ஒருபுறம் மனித வாழ்வை முன்னேற்றம் பெறச் செய்து வந்ததாயின் மறுபுறம் அது உயர்நிலையான உழைப்பின் பறிப்புக்கும் வழியமைத்து வந்துள்ளது. பொருளுடையோருக்கும் பொருள் அற்றோருக்குமுள்ள இடை வெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புக்கள் இதனால் முன்னெடுக்கப்படும் என்ற முன்மொழி வையும் மறுப்பதற்கில்லை. தொழிற்நுட்ப வளர்ச்சி மனித உடலில் செயற்கையான உள் உறுப்புக்களை உட்பொதியவைத்து உடலியக்கத்தை வினைத்திறன்படுத்தவும் மனித ஆயுளை நீட்டவும் உதவி வருதல் குறிப்பிடதக்தக்கது. ஆயினும் இந்த வாய்ப்புக்களைப் பொருண்மிய வளம் கொண்டவர்களால் மட்டுமே அனுபவிக்க முடிகிறது மனிதரது இயற்கை நுண் மதியை மேலும் வினைத்திறன் படுத்தக்கூடிய செய்கை நுண்மதி நுண்கூறுகளை (Artificial Neuralnets) மனித மூளையிலே உட்பொதிந்து மனித அறிவாற்றலையும் இயற்கை நுண்மதியையும் மேலும் மேம் படுத்தும் நடவடிக்கைகள் சாத்தியப்படும் என்ற எதிர்பார ப்புக்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நட

வடிக்கை சாத்தியமாகும் பட்சத்தில் கல்வியிலே பின்னடைவு கொண்டோர், மெல்லக் கற்போர் குறித்த பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியாதோர் என்ற பிரிவினர் இல்லாதொழிக்கப்பட்டு விடுவர். கற்றல் பற்றிய பழைய அணுகுமறைகள் தகர்பபுக்கு உள்ளாக் கப்பட்டுவிடும். ஆயினும் இந்த அனுகூலங்-களும் பொருண்மிய வசதி கொண்டவர்களுக்கே கிடைக் கப்பெறுமாதலால் ஏற்றத்தாழ்வுள்ள சமூக இடைவெளியைக் கல்விச் செயற்பாடுகள் மேலும் அதிக ரிக்கச் செய்து விடும்.
அண்மையில் மேலைத்தேய பாடசாலை மாணவர்களிடத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கணனி விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டகின்றன. கணினி நுண்மதியும் மனித நுண்மதியும் இடைவினை கொள்ளலைக் கணினி விளையாட்டுக்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கொலிவூட் திரைப்படத் தொழிலும் பார்க்க கணினி விளையாட்டுத் தயாரிப்புக்கள் கூடுதலான இலாப மீட்டும் தொழில்களாக மாறிவருகின்றன. ஆயினும் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்கை நுண்மதி நுட்பங்கள் வன்செயல்களை மாணவரிடத்தே தூண்டி விடுதலைக் குவியப்படுத்துகின்றன. நேர்முகமான சமூக நோக்கைத் தரிசிப்பதற்கும் சமூக முரண்பாடுகளை இனங்காண்பதற்கும் உரிய நேர்ச் சிந்தனைகளை வளர்க்காது இளம் உள்ளங்களை மாசுபடுத்தி விடும் செயற்பாடாகவே இது காணப் படுகின்றது.
நுண்மதி பற்றிய சமகால உளவியல் ஆய்வுகள் பன்முக நுண்மதி (Multiple inteligence) என்ற எண்ணக்கருவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இசை மற்றும் கலையாக்கங்கள் பாரம்பரியமான நுண்மதிக்கட்டமைப்பினுள் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. செயற்கை நுண்மதியின் வளர்ச்சி இசை மற்றும் கலையாக்கத் திறன்களை வளர்ப்பதற்கும் துணை செய்யத் தொடங்கியுள்ளது. எல்லா வகையான கலைச் செயற்பாடுகளையும் மேம்படுத்துவதற்குச் செயற்கை நுண்மதி பங்களிப்புச் செய்யத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்மதியைப் பயன் படுத்திக் கதைக் கோப்பையையும் கவிதைக் கோப்பையையும் முன்னெடுக்கலாம் செயற்கை நுண்மதியின் துணையோடு புகழ் பெற்ற ஜாஸ் இசைவல்லுனர் போல் கொட்குசன் உருவாக்கிய இணக்கல் (improviser) என்ற நிகழ்ச்சியாக்கம் இசையாக்க மலர்ச்சியிலே புதிய வீச்சுகளை ஏற்படுத்தியுள்ளது.
கலைத்துறைகளில் செயற்கை நுண்மதியைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆக்கமலர்ச்சியை மேம்படுத்தக் கொள்ளல் தொடர்பாகவும் ‘திகழ் ஆக்க மனம்’ (The Creative Mind) என்ற நூலை மாக்கரட் போடன் என்பவர் எழுதியுள்ளார். (Biden 1990). கலைக்கும் விஞ்ஞானத்துக்குமிடையில் உருவாக்கப்பட்ட பிரிப்புச் சவர்களை இந்நூல் தகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கவிதைத்துறையில் கணினியாற் பிறப்பாக்கம் செய்யப்பட்ட கவிதை’ என்ற புதிய வடிவம் தோற்றம் பெற்றுள்ளது. அவ்வாறே கணினியாற் பிறப்பிக்கப்பட்ட கதை மற்றும் நகைச்சுவை என்ற புதிய வடிவங்கள் நிலைபேறு கொள்ளத் தொடங்கிவிட்டன. ஒவியம் மற்றும் வரைகலையாக்கங்களிலும் செயற் கை நுண்மதியைப் பயன்படுத்தும் முயற்சிகள் எழுச்சி கொள்ளத் தொடங்கிவிட்டன. செயற்கை நுண்மதியைப் பயன்படுத்துவதால் மனிதனது ஆக்கமலர்ச்சி மேலும் விசை கொண்டு எழத்தொடங்கி விட்டது.
இயற்கையைக் கணிதப்படுத்துதல் சமூக வாழ்கையைக் கணிதப்படுத்துதல் என்பவற்றோடு கலைப்பண்புகளைக் கணிதப்படுத்துதலும் கணினிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்மதியாக்கத்தை மேலும் மேம்படுத்துவதற்கு கல்வியிலே பயன்படுத்தும் ‘ஒன்றிணைப்பு’ என்ற எண்ணக்கருவும் சமூகவியலிலே பயன்படுத்தப்படும் சமூகம்’ என்ற எண்ணக்கருவும் ஒன்றினைக்கப்படும் ஆக்கங்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. தனியொரு நபரின் நுண்மதியிற் பல மட்டுப்பாடுகள் காணப்படும். அதே வேளை பல மனிதர்களின் நுண்மதிகள் ஒழுங்கமைந்த முறையிலே ஒன்றிணைக்கப்பட்டு ஒரு தொகுதியாக்கப்படும் பொழுது மியாற்றல் கொண்ட நுண்மதித் தொகுதபியாக அது எழுச்சி கொள்ளும். இவ்வாறாக உருவாக்கப்படும் நுண்மதி நுண்மதிச் சமூகம் எனப்படும். எகிப்திய பிரமிட்டுக்கள், சீனப்பெருஞ்சுவர், தமிழகதஞ்சைப் பெரிய கோயில் முதலியவற்றில் நுண்மதிச் சமூகத்தின் மீயாற்றல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்மதியிலும் இவ்வாறாகப் பல்வேறு நுண்மதிமுகவர்களை ஒன்றிணைத்து மீயாற்றல்களை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்மதியின வளர்ச்சி கற்றல் கற்பித்தலிலே வினைதிறன் மிக்க செயற்பாடுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. செயற்கையான ஆசிரியர்கள் கணினித் திரைகளிலே உருவாக்கப் படுகின்றனர். மாணவரின் மனங்களுக்கு இனிய விநோதமான ஆசிரியர்கள் மற்றும் தனிச்சிறப்புக் கொண்ட ஆசிரியர்கள் உருவாக்கப்படுகின்றனர். கருத்துக்களையும் எண்ணக்கருத்துக்களையும் வலியுறுத்தும் பொருட்டு நிஜ ஆசிரியர்களால் எழுப்பப்பட முடியாத குரல் ஒலிப்புக்களுக்கும் அசைவுகளும் எடுத்தாளப்படுகின்றன. தனியாள் வேறுபாடுகளுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய விதம் விதமான எடுத்துரைப்புக்களும் கையாளப்படுகின்றன. திரை ஆசிரியர் (Screen Teacher) என்ற புதிய பிரிவினர் செயற்கை நிலையில் உருவாக்கம் பெற்றுள்ளனர்.

செயற்கை நுண்மதி இயக்கத்தைப் பயன்படுத்தி உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சீர்மியம் மேற்கொள்ளல் தனிமையில் சோர்ந்து இருப்போருக்கு தோழமையை உருவாக்கிக் கொடுத்தல் மகிழ்ச்சியூட்டதல் முதலாம் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வாண் – மைகளை மேற்கொள்வோருக்கு பதிலீடாகவோ அல்லது பயமுறுத்தலாகவோ செயற்கை நுண்மதி தொழில் இழப்புக்கும் அது வழி செய்யமாட்டாது. மாறாக ஒவ்வொரு வாண்மையையும் வளப்படுத்தும் அனுசரணை நிலையையே அது மேற்கொள்ளும் என்பது கைத்தொழிற்புரட்சியினதும் கணினித் தொழிட்நுட்பப் பாவனையினதும் அனுபவங்களாகவுள்ளன. உயர்நிலையான திறன்களையும் தேர்ச்சிகளையும் கொண்டவர்களுக்கான தொழில் வாய்ப்புக் களை நுண்மதித் தொழில் நுட்பம் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. சமூகத் தின் அறிவாற்றல் வளர்ச்சியின் குறியீடுகளாக செயற்கைப் பொருள்கள் அமைகின்றன. செயற்கை முனைப்பு தமிழ் மரபில் புனைவு எனவும் அழைக்கப்பட்டது. கல்வியும் செயற்கை ஆக்கங்களும் சமூகப் பொருண்மிய ஆதாரங்களை அடியொற்றியே எழுகின்றன. செயற்கைப் பொருட்களை ஆராதிக்கம் கொண்டவையாக ஆக்குதலும் அவற்றின் வழியாக பறிப்பை மேற்கொள்ளலும் பின்னைய முதலாளியத்தின் மதிநுட்பம் மிக்க செயற்பாடுகளாகவுள்ளன.

பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *