கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 15 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் ஷாப்டரின் நெருங்கிய உறவினர்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஷாப்டரின் மனைவியிடம் முதற்கட்ட வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலதிக வாக்குமூலங்களைப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், இன்று குடும்ப உறவினர்கள் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது, கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட 143 கோடி ரூபா கடன் தொகை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பில் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் பதிவு
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்படி, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிரையன் தோமஸ் வீட்டில் தங்கியிருந்தமை அவரது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலையைச் செய்த தரப்பினர் கவனத்தைத் திசைதிருப்ப ஷாஃப்டரின் தொலைபேசியிலிருந்து பிரையன் தாமஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, குருதுவத்தை – மல்பாறையில் உள்ள வீட்டை விட்டு வெளியேறிய ஷாப்டர் நேரடியாக பொரளை மயானத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளில் இருந்து அடையாளம் காணப்பட்ட அவரது காரின் பின்னால் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று பயணித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.