இலங்கையில் வாழ்கின்றவர்கள் அரச சேவையில் இணைந்துகொள்வதற்வதற்கான பிரதானமாக அமைகின்ற காரணங்களில் ஓய்வூதியம் உரித்துடையது என்பது மிக முக்கியமான ஒரு காரணமாகும். இன்று அரச சேவையில் இருக்கின்ற பலரும் தங்களது ஓய்வூதியத்தை சரியான திகதியில் பெற்றுக்கொள்ளமுடியாமல் போவதற்கு ஓய்வு பெறல் மற்றும் ஓய்வூதியம் குறித்த சரியான தௌிவின்மை காரணமாக அமைந்திருக்கின்றது. அந்த அடிப்படையில் ஓய்வு பெறல் குறித்த சில அடிப்படையான விடயங்களை இந்தப் பதிவு விளக்க இருக்கின்றது.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான (பெறச் செய்வதற்கான) சந்தர்ப்பங்கள்
அரச சேவையில் இருக்கின்ற ஒருவர் ஓய்வு பெறுவதற்கான முறைகள் பல காணப்படுகின்றன. பொதுவாக ஒருவர் தனது 55 வயதைப் பூர்த்தி செய்யும் போது அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியும். இது சாதாரண ஓய்வு பெறல் என்பதாக அழைக்கப்படும். அதன் அடிப்படையில் 55 முதல் 60 வயது வரையான எந்தக் காலப்பகதியிலும் ஓய்வு பெற்றுக்கொள்ள முடியும். 60 வயதில் ஓய்வு பெறுவது கட்டாயமானது என்ற அடிப்படையில் ( சில சுகாதார சேழவ உத்தியோகத்தர்கள் நீதிபதிகள் என குறிப்பிட்ட சில பதவிகளை வகிப்பவர்களுக்கு 62 முதல் 65 வயது வரையில் சேவையாற்றலாம்.) எவ்வாறாயினும் அந்தந்த சேவைகளுக்குரிய உச்ச வயதை அடையும் போது ஓய்வு பெறுவதனை கட்டாய ஓய்வு பெறல் என்பதாக அழைக்கப்படுகின்றது.
சாதாரண ஓய்வு பெறல் மற்றும் கட்டாய ஓய்வு பெறல் என்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஓய்வு பெறுகின்ற தினத்திலிருந்தே ஓய்வூதியக் கொடுப்பனவினை பெறுவதற்கு உரித்துடையவராகின்றனர். அத்துடன் ஓய்வு பெறுகின்ற தினத்தில் ஓய்வூதியப் பணிக்கொடையினையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஓய்வு பெறல் முறையானது ஒய்வூதிய சட்டமூலத்தின் 2-17 ஆம் பிரிவுக்கு அமைவாக ஓய்வு பெறச்செய்தல் என்பதாகக் கருதப்படும்.
இவை தவிர அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான விசேட சந்தர்ப்பங்கள் சிலவும் காணப்படுகன்றன. அவை கீழே விளக்கப்படுகின்றது.
01. வைத்திய காரணங்களுக்காக ஓய்வு பெறல்.
அரச சேவையில் இருக்கின்ற ஒருவர் தனக்கு ஏற்பட்ட ஏதேனும் நோய் ஒன்றின் காரணமாக இனிமேலும் தனது பணிகளை செய்ய முடியாது என்ற நிலையை அடைவாரானால் அவர் வைத்திய காரணங்களின் அடிப்படையில் ஒய்வு பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த அலுவலர் அரச வைத்தியர் குழு ஒன்றிடம் சமர்க்கப்படுவார். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த நோயின் காரணமாக அவரால் இனியும் பணியாற்ற முடியாது என்பதாக வைத்தியக் குழு சிபாரிசு செய்யுமாயின் அதன் அடிப்படையில் ஓய்வு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஓய்வு பெறுதலானது அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்படல்வேண்டும். இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொள்கின்ற ஒருவர் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர் 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஓய்வு பெறும் போது மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவினையும் ஓய்வூதியப் பணிக்கொடையினையும் ஓய்வு பெறுகின்ற தினத்திலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்தி செய்யாதவராக இருப்பின் அவருக்கு ஆயுலில் ஒரு முறை மாத்திரம் கிடைக்கின்ற ஓய்வூதியப் பணிக்கொடை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஓய்வு பெறல் முறையானது ஒய்வூதிய சட்டமூலத்தின் 2-14 இற்கு அமைவாக ஓய்வு பெறச்செய்தல் என்பதாகக் கருதப்படும்.
02. அரச நிர்வாக சுற்றிக்கை 30/88 இன் பிரகாரம் ஓய்வு பெறல்.
யாரேனும் ஒரு அரச உத்தியோகத்தர் 20 வருட சேவையினைப் பூர்த்தி செய்திருப்பின் அரச நிர்வாக சுற்று நிருபம் 30/88 இன் பிரகாரம் ஓய்வு பெருவதற்காக விண்ணப்பிக்கலாம். குறித்த சுற்று நிருபத்தின் பிரகாரம் தான் ஓய்வு பெறுவதற்கு விரும்புகின்றேன் என்பதாக எழுத்து மூலம் அறிவித்து ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஓய்வு பெறுதலானது அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்படவேண்டும். இவ்வாறு ஒய்வு பெறுகின்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவும் ஓய்வூதியதியப் பணிக்கொடையும் தனது 55 வயதைப் பூர்த்தி செய்கின்ற நாளிலிருந்தே கிடைக்கின்றது.
இந்த ஓய்வு பெறல் முறையானது ஒய்வூதிய சட்டமூலத்தின் 2-14 இற்கு அமைவாக ஓய்வு பெறச்செய்தல் என்பதாகக் கருதப்படும்.
03. வினைத்திறன் இல்லாமை காரணமாக ஓய்வு பெறச் செய்தல்
யாரேனும் ஒரு அலுவலருக்கு வழங்கப்படுகின்ற பணிகளை முறையாக நிறைவேற்ற முடியாத நிலையலான வினைத்திறன் அற்றுக் காணப்படுகின்றார் என்பதாக நிறுவனத் தலைவர் தீர்மானிக்கின்றபோது குறித்த அலுவலரை சேவையிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக வினைத்திறன் இன்மை காரணமாக ஓய்வு பெறச் செய்தல் என்ற அடிப்படையில் ஓய்வு பெறச் செய்யலாம். இவ்வாறு ஒய்வு பெறுகின்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவும் ஓய்வூதியதியப் பணிக்கொடையும் தனது 55 வயதைப் பூர்த்தி செய்கின்ற நாளிலிருந்தே கிடைக்கின்றது.
இந்த ஓய்வு பெறல் முறையானது ஒய்வூதிய சட்டமூலத்தின் 2-15 இற்கு அமைவாக ஓய்வு பெறச்செய்தல் என்பதாகக் கருதப்படும்.
4. பெண் ஊழியர்களுக்கு ஓய்வு பெறுவதற்கான சந்தர்ப்பங்கள்
தாதியர் சேவை, ஆசிரியர் சேவை, பொலிஸ் சேவை, குடும்ப சுகாதார சேவை, சிறைச்சாலைகள் சேவை போன்ற சேவைகளில் பணியாற்றுகின்ற பெண் அலுவலர்கள் தனது 20 வருட சேவைக் காலத்தினைப் பூர்தி செய்கின்ற அல்லது தனது 50 வயதினைப் பூர்திசெய்கின்ற என்ற இரண்டு தினங்களில் முன்னதாக வருகின்ற தினத்தில் ஓய்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு ஓய்வு பெறுகின்றவர்கள் தான் ஒய்வு பெறுகின்ற நாளிலிருந்தே மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவையும் ஓய்வூதியப் பணிக்கொடையினையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஓய்வு பெறல்முறையானது ஒய்வூதிய சட்டமூலத்தின் 2-14 பிரிவிற்கு அமைவாக ஓய்வு பெறச்செய்தல் என்பதாகக் கருதப்படும்.
5. ஓய்வூதி யத்தை நிறுத்தி வைத்து ஓய்வு பெறச் செய்தல்.
யாரேனும் ஒரு அலுவலர் தனது 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து ஓய்வு பெற்றுக்கொண்டு அரச கூட்டுத்தாபனம், சபைகள் , அதிகார சபை , பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் சேவைக்குச் செல்ல சந்தர்ப்பம் வழஙக்கப்டுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் செல்கின்ற பணியில் சேவையாற்றி உரிய வயதில் ஓய்வு பெறுகின்றபோது அரச சேவையில் முன்னர் இருந்த 10 வருங்களுக்காக ஓய்வூதியக் கொடுப்பனவும் ஓய்வூதியப் பணிக்கொடையும் பெற்றுக்கொள்ள உரித்துடையவராகின்றார்.
இந்த ஓய்வு பெறல் முறையானது ஒய்வூதிய சட்டமூலத்தின் 2-48 (அ) பிரிவுக்கு அமைவாக ஓய்வு பெறச்செய்தல் என்பதாகக் கருதப்படும்.
6.ஒழுக்காற்று காரணங்களுக்காக ஓய்வு பெறச் செய்தல்.
யாரேனும் ஒரு அலுவலர் தனது ஓய்வு பெறுவதற்கான உரிய வயது பூரணமான நிலையில் ஏதேனும் ஒரு ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் ஓய்வூதிய சட்டமூலத்தின் 2.12 எனும் பிரிவின் அடிப்படையில் ஓய்வு பெறச் செய்யப்படுவார். அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் முடிவடைந்து அதன் பின்னர் வழங்கப்படுகின்ற ஒழுக்காற்று கட்டளையின் அடிப்படையில் அவரது ஓய்வூதியக் கொடுப்பனவு தீர்மானிக்கப்படும். இந்தக் கட்டளையானது அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வழங்கப்படும். குறித்த ஒழுக்காற்றுக் கட்டளையின் பிரகாரம் அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவாரானால் அவருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பமாட்டாது.
அவ்வாறின்றி குறித்த அலுவலருக்கு தண்டனை ஒன்றாக சம்பள ஏற்றங்கள் சிலவற்றை குறைத்தல், அவர் வகிக்கும் பதவியிலிருந்து கீழுள்ள பதவிக்கு மாற்றம் செய்தல் அல்லது ஓய்வூதியத்திலிருந்து ஒரு தொகையை அரவிடல் போன்ற அடிப்படையில் ஓய்வு பெறச் செய்யுமாறு ஒழுக்காற்றுக் கட்டளை வழங்கப்பட்டிருக்குமாயின் அவர் ஓய்வு பெற்ற தினத்திலிருந்தே மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவையும், ஓய்வூதியப் பணிக்கொடையையம் பெறுவதற்கு உரித்துடையவாகின்றார்.
இவ்வாறு அரச சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மேன்முறையீடு செய்கின்ற போது அந்த மேன்முறையீ பரிசீலனை செய்யப்பட்டு அனுதாப அடிப்படையில் ஓய்வூதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை தண்டமாக அறவிட்டு ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
07. பதவியொன்று இல்லாமலாகல் அடிப்படையில் ஓய்வு பெறச் செய்தல்
அரச பதவி ஒன்றினை இனிமேல் நடைமுறையில் இருக்காது என்ற அடிப்படையில் இல்லாமலாக்கப்படல் அல்லது திணைக்களம் மூடப்படல் என்ற அடிப்படையில் இந்த ஓய்வு பெறச்செய்தல் நடைபெறும். இந்த ஓய்வு பெறச் செய்தல் என்பது ஓய்வூதியச் சட்டமூலத்தின் 2.7 பிரிவுக்கு அமைய மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொள்கின்ற ஒருவர் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர் 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஓய்வு பெறும் போது மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவினையும் ஓய்வூதியப் பணிக்கொடையினையும் ஓய்வு பெறுகின்ற தினத்திலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். 10 வருட சேவைக்காலத்தினைப் பூர்தி செய்யாதவராக இருப்பின் அவருக்கு ஆயுலில் ஒரு மறை மாத்திரம் கிடைக்கின்ற ஓய்வூதியப் பணிக்கொடை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம். இங்கு ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்க அவரது உண்மையான சேவைக் காலத்துடன் மேலும் 5 வருடங்கள் சேர்க்கப்படும்.
(உதாரணமாகக் குறிப்பிடுவதாயின் இலங்கையில் இரசாயன உரம் சம்பந்தப்பட்ட திணைக்களம் ஒன்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இலங்கையில் இனிமேல் இரசாயன உரம் தடைசெய்யப்படும் என்ற தீரமானம் மேற்கொள்ளப்பட்டு உரம் தயாரிக்கும் திணைக்ளம் மூடப்படுமாயின் அந்தத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உரம் சாரந்த இரசாயனவியலாளர் எனும் பதவிகள் இல்லாமலாகிவிடும். இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் மேற் குறிப்பிட்ட அடிப்படையில் ஓய்வு பெறச் செய்யப்படுவார்கள்.)
ஓய்வு பெறும் போது சம்ரப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கிடைக்கின்ற ஓய்வூதியத் கொடுப்பனவினை கணிப்பீடு செய்தல் என்பன குறித்து அடுத்தடுத்த பதிவுகளிவ் விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.