விருத்தாச்சலத்தில் வளையகாப்பு நடத்தகூறி, கர்ப்பிணி மனைவி கூறியதால், ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற காதல் கணவன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயது கொண்ட அற்புதராஜ்.
இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார். இதேபோல் விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் 18 வயது கொண்ட சக்தி. ஏழுமலை இறந்த பின்பு, தனது ஒரே மகளுடன், தாய் லதா, விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.
பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கும் சக்தி, கடந்த கொரோனா கால கட்டத்தின் போது, விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அதே பேக்கரியில் அற்புதராஜியும் வேலை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன், கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு, இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பின்பு, சக்தியின் வீடான விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள தனது தாய் லதா வீட்டில், தனது காதல் கணவனுடன் ஒன்றாக வசித்து வந்தனர். சக்தி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீட்டு, நேற்று மதியம் சாப்பாட்டிற்காக அற்புதராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார். தனது மருமகன் அற்புதராஜ் சென்ற பின்பு, வீட்டிற்குள் நுழைந்த சக்தியின் தாயார் லதா, தனது மகள் உடல் அசைவு இல்லாத நிலையில் படுத்திருப்பதைக் கண்டு எழுப்பி உள்ளார். ஆனால் தனது மகள் சக்தி, மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடப்பதைக் கண்டு கதறி அழுது உள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது சக்தி உயிரிழந்ததை கண்டு, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சக்தியின் கணவரான அற்புதராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாதது போல், நாடகம் ஆடிவந்த அற்புதராஜ், ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தனது மனைவியை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி, அடிக்கடி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகவும், அவ்வாறு நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த அற்புதராஜ் தனது கர்ப்பிணி மனைவி அடித்துக் கொன்றது தெரிய வந்தது.
இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன சக்தி தனது வீட்டில் உள்ள கதவுகள், சுவர்களில் தனது அம்மா மீதும், தனது காதல் கணவர் மீதும் கொண்டுள்ள பாசத்தை எழுதி வைத்துள்ளார். ஐ லவ் யு அம்மா, true lovers என கணவர் மற்றும் அம்மா பேரை வீடு முழுவதும் எழுதி வைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், அவரது வீட்டின் கதவில், ”அம்மா உன்ன நான் புரிஞ்சுக்காம போயிட்டேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உன்ன என்னால மறக்க முடியாது அம்மா. நீ எனக்காக நல்லா இருக்கணும் அம்மா”. என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தி வந்த காதல் மனைவியை கணவன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.