கள்ளக்குறிச்சி மாணவி படித்த பள்ளியின் தாளாளர் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்! புதிய அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சி மாணவி படித்த பள்ளியின் தாளாளர் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்.பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரிய மனுவில் வெளியிடப்பட்ட உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் நடந்த பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி பள்ளி நிர்வாகம் அளித்த மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மனுவில், பள்ளியை சீரமைத்து திறக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசு ஏற்ப்பாட்டின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் 8 வகுப்புக்கு ஆன்லைன் முறையிலும், ஒன்பது முதல் 12ம் வகுப்புக்கு அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் தடயம் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.

முதலில் பள்ளி சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்த ஜின்னா, சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி வழங்க முடியும் என கூறினார்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த கோரிக்கை மனுவை, 10 நாட்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Shares