முகாம் போலீஸ் மது.போதையில் ஆபா.சமா திட்டி, துன்புறுத்துகின்றார்கள்.. இலங்கை அகதி புகார்!!
மது போதையில் இருந்த முகாம் பாதுகாப்பு போலீஸார் கோடீஸ்வரனிடமிருந்து நாவல் பழங்களைப் பறித்து, அவமரியாதையாகவும், அவர் மனைவியை ஆபாசமாகவும் பேசியதாக கோடீஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடந்த மே மாதம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் கள்ளப்படகு மூலம் ராமேஸ்வரம் வந்திறங்கினார்.
பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று தன் ஏழு மாத கர்ப்பிணி மனைவி கேட்டதற்காக அங்குள்ள, நாவல் பல மரத்திலிருந்து கீழே உதிர்ந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்துக்கொண்டு வந்தபோது, அங்கு மது போதையில் இருந்த முகாம் பாதுகாப்பு போலீஸார் கோடீஸ்வரனிடமிருந்து நாவல் பழங்களைப் பறித்து, அவமரியாதையாகவும், அவர் மனைவியை ஆபாசமாகவும் பேசியதாக கோடீஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், போலீஸாரின் இத்தகைய செயலை எதிர்த்து கேள்வி கேட்ட தன்னை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை அகதிகள் மூலம் தகவல் வெளியே கசிவே, பிரச்னை பெரிதாவதை அறிந்து முகாம் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கோடீஸ்வரனிடமும், அவர் மனைவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து மண்டபம் அகதிகள் முகாமுக்குச் சென்ற நம்மிடம் பேசவந்த கோடீஸ்வரனை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீஸாரிடம் நாம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அவரை நம்மிடம் பேச அனுமதித்தனர்.

நம்மிடம் பேசிய கோடீஸ்வரன், “இலங்கையில் வாழ வழி இல்லை என்பதால் உயிர் பிழைப்பதற்காக தமிழ்நாட்டை நாடிவந்தோம். தமிழ்நாடு அரசு எங்களை முகாமில் நல்லபடியாக தங்கவைத்திருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் போலீஸார், அதிகாரிகள் எங்களை நாயைவிடவும் கேவலமாக நடத்துகிறார்கள். மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசுகிறார்கள்.
என்னுடைய கர்ப்பிணி மனைவி நாவல் பழம் கேட்டதற்காக அங்குள்ள மரத்தில் உதிர்ந்து கிழே கிடந்த நாவல் பழங்களை எடுத்துச் சென்றேன். அப்போது என்னையும், என் மனைவியையும் மது போதையில் முகாம் போலீஸார் அசிங்கமாகப் பேசி, அடித்து துன்புறுத்தினர்.
இங்கு இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. மிக கேவலமாக நடத்துகின்றனர். இதனை வெளியே சொன்னால் தங்களை துன்புறுத்துவார்களோ என பயத்தில் யாரும் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். என் மூலமாவது இவர்களுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கட்டும்.

இங்கே இவர்கள் இப்படி கொடுமைப்படுத்துவார்கள் எனத் தெரிந்திருந்தால் இலங்கையிலேயே பட்டினியாக கிடந்து உயிர் விட்டிருப்போம். இனி தமிழ்நாட்டை நம்பி இலங்கைமக்கள் வர வேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என கோடீஸ்வரனும் அவர் மனைவியும் கண்ணீர் மல்க நம்மிடம் தெரிவித்தனர்.
அப்போது அங்கே இருந்த போலீஸார், “சார் நடந்த சம்பவத்துக்கு அகதியிடம் போலீஸார் மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இதனை பெரிது படுத்தவேண்டாம்” என நம்மிடம் கூறினர். போலீஸார் அடித்தது தவறுதானே?’ என நாம் கேட்டதற்கு,
நாங்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டோம் எனச் சொல்லி விட்டோம், பின்னர் உங்கள் இஷ்டம்’ என மிரட்டும் தொணியில் கூறிச்சென்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் விளக்கம் கேட்டபோது, “போலீஸார் மது போதையில் அகதிகள்மீது தாக்குதல் நடத்தியதாக எனக்கு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். காவலர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறினார்.