மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் Instagram-ல் பழகிய மர்ம நபர் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு instagram பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் instagram மூலம் அவருக்கு இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் instagram மூலம் பேசி வந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு என்று உறவினர்கள் யாரும் கிடையாது. இதனால் கொஞ்சம் சேமித்து வைத்துள்ள நகை மற்றும் பணத்தை உனக்கு அனுப்பிவைப்பதாக அந்த பெண்ணுடன் கூறியுள்ளார்.
இதை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து தற்போதுதான் வெளிநாட்டிலிருந்து பணம் மற்றும் நகையை அனுப்புவதால் சுங்க வரி கட்ட வேண்டியுள்ளது. ரூ.15 லட்சம் கொடுத்து அனுப்பினால் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.
அந்த பெண்ணும் அவர் கேட்ட பணத்தை வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறிய படிப் பணம் மற்றும் நகையை அனுப்பவில்லை. இதையடுத்து மீண்டும் ரூ. 10 லட்சம் பணம் வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார்.
இதனால் அவர் மீது இளம் பெண்ணுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து தான் கொடுத்த ரூ.15 லட்சம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் இந்த பெண்ணுடன் சமூகவலைதள உரையாடலைத் துண்டித்துள்ளார்.
இளம் பெண் பல முறை தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரால் முடியவில்லை. பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.