வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

சென்னையில் பள்ளி மாணவி விபத்தில் சிக்கியதை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோடி அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார்

சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி லட்சுமிபிரியா. குரோம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த இவர், சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக மிதிவண்டியில் சென்றுள்ளார்.

பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிய லட்சுமிபிரியா, பின்னர் தோழிகளுடன் வீடு திரும்பினார். அப்போது அஸ்தினாபுரம் பகுதியில் மாணவி சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து மாணவியின் மிதிவண்டி மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமிபிரியா, பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தில் பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Shares