தமிழக மாவட்டம் சேலத்தில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த கல்லூரி மாணவி ரோஜா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர், மாணவி ரோஜாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை, தன்னை காதலிக்க கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விடயம் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில், ஊர் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை, சம்பவத்தன்று ரோஜாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து அங்கு சென்றுள்ளார்.
மாணவியை கல்லால் அடித்து.. ஒருதலை காதலால் இளைஞரின் வெறிச்செயல்!
வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த அவர், ரோஜா வெளியே வந்ததும் என்னை காதலித்து திருமணம் செய்துகொள், இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரோஜா கூச்சலிட்டதால், கோபமடைந்த சாமிதுரை மாணவி மீது மண்ணெண்ணையை ஊற்றி கீழே தள்ளியுள்ளார். பின்பு ரோஜாவின் கழுத்தை மிதித்து, தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ரோஜாவின் குடும்பத்தார் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரோஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.