தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார்.
இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது. உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் செல்வராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதன்படி தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். எனவே தந்தையின் கடைசி ஆசையை நிருவெற்றும் வகையில், இந்த குறையை போக்க பத்மாவதி குடும்பத்தினர் ஒரு நெழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளனர்.
அந்த வகையில் பத்மாவதி குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். மேலும் செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள்.
இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்து மணப்பெண்ணை தேற்றினார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.