குழந்தை திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா (16) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார்.
நிச்சயதார்த்தத்தை நிறுத்திய அதிகாரிகள்
இந்த நிலையில், சிறுமிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். பிரகாஷ் (32) என்ற நபருடன் சிறுமிக்கு நேற்று நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்றது.
இதையறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். மைனர் என்பதால் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும், 18 வயது பூர்த்தியான பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அதிகாரிகளின் பேச்சை ஏற்றுக்கொண்ட சிறுமியின் பெற்றோர், திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தினர். இந்நிலையில் திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனதால் ஆத்திரமடைந்த பிரகாஷ், சிறுமியின் பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிரகாஷ், சிறுமியின் பெற்றோரை தாக்கிவிட்டு, சிறுமியை வீட்டில் இருந்து இழுத்து சென்று அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த பின்னர் அந்த இடத்தை விட்டு தப்பியோடினார்.
பயங்கர சம்பவத்தை செய்துவிட்டு தப்பியோடிய பிரகாஷை போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில் , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறுமி, திருமண ஏற்பாட்டால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.