தம்புள்ளை, இப்பன்கடுவ நீர்த்தேக்க மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி- ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்து நெத்மினா என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தனது பாட்டி, சிறிய தாய் மற்றும் நண்பர்களுடன் அனுராதபுரத்திற்கு ( 23.02.2023) இன்று புனித யாத்திரை சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
தம்புள்ளை பொலிஸார் விசாரணை
இப்பன்கடுவ நீர்த்தேக்கத்தில் நீராட இறங்கிய போதே நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தம்புள்ளை பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மாணவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.