இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரித்தானியப் பெண் மேற்கொண்ட நடவடிக்கை

பிரித்தானியப் பெண் ஒருவரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கெய்லி பிரேசர் என்ற பிரித்தானியப் பெண் இந்த நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தியதுடன், தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

எனினும், மேன்முறையீட்டாளர் உண்மைகளை மறைத்து, தவறான விடயங்களை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளார் என்று சட்டமா அதிபர் பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தார். இந்தநிலையிலேயே உயர்நீதிமன்றம் குறித்த முறையீட்டை நிராகரித்துள்ளது.

உத்தரவு
முன்னதாக, பிரேசர் 2022இல் இலங்கையில் சுற்றுலாப் பயணியாக வந்து, காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் காணொளிகளை வெளியிட்டார்.

இதனையடுத்து பிரேசர், விசா நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த முடிவு செய்திருந்ததுடன், 2022 ஆகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தது.

எனினும் இன்று வரை இலங்கையில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், நாடு கடத்தும் அதிகாரிகளின் உத்தரவையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்.

Shares