கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு உத்தேச செலவீனமாக 90 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
இந்திய துணைத்தூதரகம்
இம்முறை பயணிகளிடம் ஒருவழி படகுப் பயண கட்டணமாக 1,500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளதாகவும் யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டுவர வேண்டும் என்பதாகவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் யாழ். மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில், அதைப் பற்றி இம்முறை தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
கச்சதீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.