முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதம்

வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்துகள்
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பிரதான வீதிகளில் நெல் உலர்த்துவது அல்லது காயப்போடுவது ஆகும்.

விவசாயிகள் இதற்காக பிரதான வீதிகளின் அரைவாசியை விட அதிக பகுதியை பயன்படுத்துகின்றார்கள்.

சட்ட ரீதியாக இதற்கு அனுமதி இல்லை எனினும் விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அதிகாரிகளும் பொறுப்பானவர்களும் இதை கண்டு கொள்வதில்லை. இவ் வருடம்(2024) இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே வீதி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வீதிகளில் நெல் காயப்போடுவதற்கு சில கட்டுப்பாடுகள் அல்லது ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

விதிமுறைகள்
வீதியின் நடு பகுதியிலிருந்து இரண்டு அடி குறைவாக நெல்லை காயவிடுதல், வைத்தியசாலைகள், சன நெருக்கமான பகுதிகளை தவிர்த்தல், ஒடுக்கமான வீதிகள், வளைவுகள், பாலம் போன்ற இடங்களை தவிர்த்தல், தொடக்கத்திலும் முடிவிலும் ஒளிரக்கூடிய அல்லது கண்ணுக்கு தெளிவாக புலப்படக் கூடிய அடையாளம் வைத்தல், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றின் முன் பின் பகுதிகளில் ஒளிப் பிரதிபலிப்பு (Reflector) அடையாளம் பேணப்படுதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் பிரதேச செயலாளர்கள் முல்லைத்தீவு, பொலிஸ் துறை முல்லைத்தீவு, விவசாய திணைக்களம் முல்லைத்தீவு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு, போக்குவரத்து திணைக்களம் முல்லைத்தீவு ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   சில நாட்களில் திருமணம்.. பற்களை அழகாக்க அறுவை சிகிச்சை செய்த மணமகனுக்கு நேர்ந்த சோ.கம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *