அண்ணியைக் கொன்று கிணற்றில் புதைத்த இளைஞர்!!

விராலிமலையில்..

விராலிமலை அருகே சொத்து தகராறில் அண்ணன் மனைவியை கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்து வைத்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் இருக்கிறது ஆம்பூர்பட்டி.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டனர்.

இந்நிலையில், சேவியருக்கு திருமணம் நடந்து அவருக்கு குழந்தைகள் இல்லை. ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, சேவியர் மனைவி ஆரோக்கியமேரி (37) தனது கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வைத்துக் கொண்டார்.

இதனால், அதுகுறித்து ஆரோக்கியமேரிக்கும், அவரது கொழுந்தனாரான ராயப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, ‘உனக்கு தான் குழந்தை இல்லையே எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்து நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய்?.

ஒழுங்காக அந்த சொத்துகளை என் பெயருக்கு எழுதி கொடுத்துவிடு. இல்லையென்றால் நடக்கிறதே வேறு. நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியமேரி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ள நெற்கதிர் வயல்களில் மயில் விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது, ஆரோக்கியமேரியின் அண்ணன் சகாயராஜ் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து போனில் பேசியுள்ளார். பின்னர், மாலை 7 மணியளவில் அவர் தனது தங்கைக்கு போன் செய்யும்போது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

பலமுறை பேச முயன்றும் பேச முடியாததால் ஆரோக்கியமேரியின் வீட்டருகே உள்ளவர்களுக்கு போன் செய்து வயலுக்கு சென்று தேடி பார்க்க சொல்லி உள்ளார். பின்னர், அவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை.

இதனால், சந்தேகமடைந்த சகோதரர் அவரது உறவினருடன் கருங்குளத்தில் இருந்து புறப்பட்டு ஆம்பூர்பட்டிக்கு வந்து வயல் பகுதியில் உள்ள கிணறு, மரம், வயல்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அன்று இரவே இதுகுறித்து மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர், நேற்று காலை அவரது உறவினர்கள் ஆரோக்கியமேரியின் வயல் அருகே உள்ள மதயானைப்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரது காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து இதுகுறித்து மாத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாத்தூர் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர், நேற்று மதியம் 1 மணியளவில் விராலிமலை தாசில்தார் கருப்பையா முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றை தோண்டி பார்த்தபோது அதில் ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அவரது சடலத்தை போலீஸார் குழியில் இருந்து வெளியே எடுத்து உடற்கூராய்வு செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை அவரது கொழுந்தன் ராயப்பன் கொலை செய்து உடலை அவரது டிராக்டர் கொலுவில் வைத்து எடுத்து சென்று அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள மூக்கன் காட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சொருகி புதைத்து விட்டு பின்னர் டிராக்டரை வீட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்ததாக கூறினர்.

மேலும் போலீஸார் ராயப்பனின் தாய் சின்னம்மாள், மனைவி லிவிட்டியாமேரி ஆகியோரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த ராயப்பனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து மாத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தனர். சொத்துப் பிரச்னைக்காக தனது அண்ணன் மனைவியை இளைஞர் ஒருவர் கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Shares