பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்: கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
நடிகர் போண்டா மணி தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்.
இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்தின் முத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டா மணி தலைகாட்டி இருந்தாலும், விவேக்குடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க தொடங்கிய பிறகு, தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
வடிவேலுவுடனும் இணைந்து, வின்னர், வசீகரா, சச்சின் போன்ற படங்களிலும் காமெடியில் கலக்கினார். குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில் போலீஸ் வந்து அடித்து கேட்டாலும் சொல்லாதீங்க என வடிவேலுவிடம் இவர் கூறும் காட்சி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சினிமா துறையில் சாதிக்க நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
உடல்நிலை பாதிப்பு
ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் மகிழ்வித்த போண்டா மணி, ஒரு படப்பிடிப்பின் போது சாக்கடையில் விழுந்ததில், கழிவுநீரை பருகும் சூழல் உருவானது. இதனால் அவரது இரு சிறுநீரகங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி. இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.
அவருக்கு சில சினிமா நட்சத்திரங்கள் நிதி உதவி அளித்த நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பின், போண்டா மணி மீண்டு வந்தார். நீண்ட ஓய்வுக்குப் பின் தேறி வந்த போண்டா மணி, அதன் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் அவரது உடல்நிலை பலவீனமாக இருந்ததுள்ளது, இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார்.
போண்டா மணி மரணம்
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம் கேள்விப்பட்ட திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது திடீர் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.