அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும் அல்லவா..!தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்..!

அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா என்று கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அதேநேரத்தில், கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் தனி ஆளாக தன் பிள்ளைகளை வளர்த்து வரும் இந்தச் சமூகத்தில் யாருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை என் மகன்களுக்குத் தோன்றியதை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது,” என்கிறார் செல்வி.

கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவருடைய அம்மாதான் செல்வி. பாஸ்கர், அவரது தம்பி விவேக் இருவரும் தங்களது தந்தையை இளம் வயதிலேயே இழந்தவர்கள். 2009ஆம் ஆண்டில் அவர்களது தந்தை உயிரிழக்கும்போது பாஸ்கர், வேலூரில் பொறியியல் துறையில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். விவேக் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

“அப்போதெல்லாம் மறுமணம் குறித்து எங்களுக்குச் சிந்தனையே இருந்ததில்லை. எங்கள் ஊரில், சொந்த பந்தங்களில் கணவரை இழந்து, தனியாகக் குழந்தைகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் அவர்கள் அப்படி தனியாக இருப்பதைப் பெருமையாகப் பேசுவதைப் பார்த்து, நாங்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால், நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஓர் ஆசிரியரை வழக்கம்போல் ஊருக்குப் போனபோது சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர்தான் அம்மாவின் மறுமணம் குறித்துப் பேச்சு எடுத்தார்.

உங்க அம்மா இத்தனை நாளா தனியா கஷ்டப்படுறாங்களே, அவங்களுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வெக்கலாமில்ல’ என்று அவர் கேட்டார்,” என்று கூறும் பாஸ்கர், அந்த ஆசிரியர் அதைப் பற்றிப் பேசிய காலகட்டத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே தான் இல்லை என்கிறார்.

அதனாலேயே இப்படி ஒரு பேச்சு வந்தது என்று தனது அம்மாவிடம் பேசாத பாஸ்கர், அந்த ஆசிரியரிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார்.

விளையாட்டாகத் தொடங்கிய மறுமணப் பேச்சு

அதற்குப் பிறகு நீண்டகாலம் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த பாஸ்கர், கல்லூரி முடித்து, வேலை, வெளியுலகம் என வந்துவிட்டார். அந்த நேரத்தில் அவருடைய புத்தக வாசிப்பு பழக்கமும் அதன்மூலம் கிடைக்கும் பழக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே சென்றுள்ளது.

அப்போது வாசிப்பு மூலம் அறிமுகமான பல நண்பர்கள் இதே விஷயத்தைப் பற்றிப் பேசுவதைப் பார்த்துள்ளார். பெரியாரின் மறுமணம் குறித்த எழுத்துகள், கலைஞருடைய எழுத்துகளை வாசிப்பது, அதுகுறித்து விவாதிப்பது எனத் தொடர்ந்துகொண்டிருந்த பாஸ்கர் ஒரு கட்டத்தில், “நம் வீட்டிலும் அம்மா கணவரை இழந்து தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக்கூடாது?” எனச் சிந்தித்துள்ளார்.

அண்ணனின் வழியையே பின்பற்றி நடந்துகொண்டிருந்ததால் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இன்றிச் சம்மதித்ததாக அவரது தம்பி விவேக் கூறினார். இருவரும் அவர்களது அம்மாவிடம் இதுபற்றிப் பேசியுள்ளார்கள்.

எங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த அம்மாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் உள்ளது, அவருக்கும் தேவைகள் உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அம்மாவிடம் இதை எப்படிப் பேசுவது என்ற தயக்கம் இருந்தது.

ஆகையால் விளையாட்டாகப் பேசுவதைப் போலவே இந்தப் பேச்சைத் தொடங்கினோம். எனக்கு திருமணம் வயது ஆகிவிட்டது எனக் கூறி என்னிடம் அம்மா திருமணப் பேச்சை ஒருநாள் எடுத்தார். அப்போது, ‘நீ கல்யாணம் பண்ணாதான் நான் பண்ணுவேன்’ என்றேன்.

‘பிறகு நீண்டகாலமாக தனியாகச் சிரமப்படுகிறாயே, நீ முதலில் திருமணம் செய்துகொள், பிறகு நான் செய்துகொள்கிறேன்’ என்று அம்மாவிடம் அடிக்கடி அதுகுறித்துப் பிறகு பேசத் தொடங்கினேன்,” என்கிறார் பாஸ்கர்.
எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள்

தனது இரு மகன்களும் இந்தப் பேச்சை எடுத்து சில ஆண்டுகள் கழித்தே செல்வி மறுமணம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்களது உறவுகளில் ஏற்கெனவே இதுபோல் கணவரை இழந்தவர்கள் தனி ஆளாகவே கடைசி வரை இருப்பதும் இத்தகைய நடைமுறையை உறவுகள் ஏற்றுக்கொள்ளாததும் அவர்களுக்கு மறுமணம் செய்வதைச் சவாலாக்கின.

“மூத்த மகன் என்னிடம் இதுகுறித்துப் பேசியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் ஆகவேண்டிய வயதில் மகன் இருக்கும்போது நான் திருமணம் செய்துகொண்டால் ஊர் என்ன பேசும் என்று அவனைக் கடிந்துகொண்டேன்.

ஆனால், ‘நீங்களும் எத்தனை காலம்தான் தனியாகச் சிரமப்படுவீர்கள், உங்களுக்கு என ஒரு துணை இருந்தால், வெளியூர்களில் வேலை செய்யும் நானும் தம்பியும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்ற நிம்மதியோடு இருப்போம்.

அதுமட்டுமின்றி உங்களுக்கு என வாழ்க்கை இருக்கிறது. அதை நீங்கள் வாழ்ந்துதான் ஆகணும். இதன்மூலம் உங்களைப் போல் கணவரை இழந்தவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்’ என்று கூறினான்,” என்று கூறும் செல்வி, அதற்குப் பிறகுதான் அதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.

தனிமையில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்ட போதும் யாருமே உறுதுணையாக வந்து நிற்காதபோது, மறுமணம் விஷயத்தில் மட்டும் ஏன் அத்தகையோர் என்ன பேசுவார்கள் எனப் பார்க்க வேண்டும் என்று கூறியதோடு தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தைரியத்தையும் மன உறுதியையும் தனது மகன்கள் வழங்கியதாகக் கூறுகிறார் செல்வி.

அதைத் தொடர்ந்து ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, மகன்கள் பக்கபலமாக நிற்கும் நம்பிக்கையில் மறுமணம் செய்துகொள்ள செல்வி முடிவெடுத்துள்ளார்.
அம்மாவுக்காக மாப்பிள்ளை தேடிய மகன்கள்

அம்மாவின் சம்மதம் கிடைத்துவிட்டது. அடுத்ததாக அவருக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேட வேண்டும். “வெறுமனே யாராவது மனைவியை இழந்தவரைத் தேடிப்பிடித்து அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்து கடமையை முடிக்க நாங்கள் நினைக்கவில்லை.

அவருக்காகத் தேடும் நபருடன் அவரை சில நாட்களுக்குப் பேசிப் பழகுமாறு கூறினோம். அம்மாவுக்கு சரி எனப்பட்டால் மேற்கொண்டு பேசலாம் என நினைத்தோம். அந்த முயற்சியில் இப்போது மணந்துள்ள அப்பாவை அம்மாவுக்குப் பிடித்ததால் அவர்கள் மறுமணம் செய்துகொண்டார்கள்,” என்கிறார் பாஸ்கர்.

“உன் பிள்ளைகளே கூறினாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வாழ்க்கைக்கு நீ எப்படி சம்மதிக்கலாம் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். கணவரை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்ள சட்டமே இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்?

பிள்ளைகளுக்குச் சுமையாக இருக்காமல், இறுதிக்காலத்தில் எனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே!

திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்,” என்கிறார் செல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *