வீட்டிற்கு அடியில் புதையல்! ஜோதிடத்தை நம்பி 20 அடி ஆழம் தோண்டிய நபருக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை நம்பி, புதையல் ஆசை காரணமாக வீட்டின் உள்ளே 20 அடி ஆழம் பள்ளம் தோண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பெரம்பலூர் அருகே விளாமூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர், இரு சக்கர வாகனத்தில் சென்று ஐஸ் வியாபாரம் நடத்தி வருகிறார்.

ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட இவர், ஜோதிடர் ஒருவரை அடிக்கடி பார்க்கச் செல்வது வழக்கம். அப்போது அந்த ஜோதிடர் உங்களது வீட்டில் புதையல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய அவர், தனது நண்பர்கள் உதவியுடன், வீட்டில் குழி தோண்ட முடிவு செய்தார். அதன் படி, பூசாரி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்த அவர், வீட்டில் பூஜை செய்து பிரபு உள்பட 8 பேர் புதையல் இருப்பதாக கருதி வீட்டில் குழி தோண்ட ஆரம்பித்தனர்.

மூன்று நாட்களாக இரவும், பகலுமாக சுமார் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. பிரபு வீட்டின் முன்பு பூசாரி, அவரது நண்பர்கள் வந்த கார் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

மூன்று நாட்களாக வீட்டின் கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பிரபு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது 20 அடி ஆழம் தோண்டப்பட்டு மண்குவியல் கிடப்பதும், மாந்தீரிக பூஜை செய்யப்பட்டு இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்த வந்த பொலிசார் மாந்தீரிக பூஜையில் ஈடுபட்டிருந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்டம் மதுரம்சாவடி கிராமத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணிமாறன், கோட்டடாத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலு, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் உரிமையாளர் பிரபு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நடந்த விஷயத்தை பிரபு கூற, உடனே பொலிசார் கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர் வெள்ளியங்கிரி, பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, புதையலுக்காக நரபலி எதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றனர்,