புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

ஈ.பி.டி.பி. இன் வழிமுறையே சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் தலைமை தவறான வழியில் பயணித்த போதிலும் புலிகளின் உறுப்பினர்களும் எமது சமூகத்தின் குழந்தைகள் என்பதை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் சந்தர்ப்பங்களை தவற விட்டமையினாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், பல்வேறு சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமைக்கு புலிகளின் தலைமையின் தவறான தீர்மானங்களே காரணமாக இருந்தது என்ற அடிப்படையில் புலிகளின் தலைமைமீது அதிருப்தி இருக்கின்ற போதிலும் புலிகளின் சாதாரண போராளிகளாக இருந்து தற்போது சமூக மயப்படுத்தப்பட்டவர்களுக்கு கௌரவமான வாழ்வு உறதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் கடந்த காலத்தில் தவறானவர்களை தெரிவு செய்தமையினால் ஏற்பட்ட அனுபவங்களை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்கள் பலப்படுத்தப்படுமாயின் அடுத்த சில வருங்களில் அனைத்து பிரச்சினைகளையும் தன்னால் தீர்த்து வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

SHARE

Related Posts

Previous
Next Post »