கடுமையான வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணி பெண்… ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி உண்மை!


கர்ப்பமாக இருப்பதாக பெண் ஒருவர் ஏழு மாதமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவர் கர்ப்பமில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு அஸ்வினி(22) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் திருமண முடிந்து ஓராண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அங்கிருக்கும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்தார்.

பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அஸ்வினி மற்றும் வேடியப்பன் உச்ச கட்ட மகிழ்ச்சியடைந்தார்.

அதன் பின், கடந்த ஏழு மாதமாக கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தடுப்பூசி போடுதல், மாதாந்திர பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19-ஆம் திகதி மாதாந்திர பரிசோதனைக்கு சென்றபோது அஸ்வினி வயிறு கடுமையாக வலிப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து வரும் படி கூறியுள்ளனர். இதனால் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்த போது, வயிற்றில் குழந்தை இல்லை, அது நீர்கட்டி என்பது தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வனிதா குடும்பத்தினர், அதைத் தொடர்ந்து வேறொரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதிலும் அஸ்வினி வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை, நீர்க்கட்டி தான் உள்ளது என தெரிவித்ததால் இடிந்து போய் நின்றனர்.

இதையடுத்து அஸ்வினி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்து விட்டது என அலட்சியமாக பதில் கூற, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வனிதாவின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், அஸ்வினி வயிற்றிலுள்ள கட்டியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். கட்டி இருப்பது கூட தெரியாமல் கர்ப்பத்திற்கான சிகிச்சை அளித்தது தெரியவந்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதற்கு அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

SHARE

Related Posts

Previous
Next Post »