ஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்


ஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மானிப்பாய் தேர்தல் தொகுதியில் நடாத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் பிரசாரத்தை ஊடகங்கள் மக்களுக்கு உண்மையானதும் சரியானதுமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்நிலையில் ஒரு ஸ்திரமான தலைமையை பெற்றுக் கொள்வதன் ஊடாகவே எமது மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இதனடிப்படையில் தான் ஈ.பி.டி.பியினராகிய நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். இந்நிலையில் அவ்வாறு ஸ்திரமான அரசியல் தலைமையை பெற்றுக் கொள்வதன் ஊடாக எமது மக்களுக்கான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும்.

ஆனால், இதுவரையில் பெயரிடப்படாமல் உள்ள பொது எதிரணி சார்பில் போட்டியிடும் மைத்திரிபாலசிறிசேன அவர்களினால் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்? வடக்கு மாகாண சபையை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒருவருடமும் மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் எமது மக்களுக்கான எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியவில்லையென்றும் சுட்டிக்காட்டிய அவர் நியதிச் சட்டத்தை இயற்றி அதனை செயற்படுத்த திராணியில்லாதவர்களாகவும் கூட்டமைப்பினர் விளங்கி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

எனவே, அபிவிருத்தியை தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், ஈ.பி.டி.பியின் காரைநகர் இணைப்பாளர் ரஜனி ஆகியோர் கலந்து கொண்டனர்.


SHARE

Related Posts

Previous
Next Post »